பெரம்பலூர்: பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி மக்கள் போராட்டக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் இன்று மாலை ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் வீ. ஞானசேகரன் பேசியதாவது:
தமிழக அரசு மக்களின் நலன், மாணவர்களின் எதிர்காலம் குறித்து கவலைப்படவில்லை. இதனால், பெண்கள் பாதிக்கப்படுவதோடு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் இளைஞர்கள் உயிரிழந்து வருவது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
குடிப்பழக்கத்தால் ஆண்கள் வேலைக்கு செல்லாமல் வருமானத்தை இழப்பதால், குடும்பம் நடத்த முடியாமல் குழந்தைகளுடன் பெண்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
எனவே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் குணசேகரன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் வி. ஜெயராமன், மாதர் சங்கத் தலைவர் கலையரசி,
மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர்கள் வேல்முருகன், என்.எஸ். இளங்கோவன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மு. தேவராஜ், வழக்குரைஞர்கள் பி. காமராஜ், ஆர். ஸ்டாலின், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் என். செல்லதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.