பெரம்பலூர்: சென்னை உயர்நீதி மன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அறிவிப்பின் படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக நகர்புற உள்ளாட்சியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை பொது மக்களின் பங்களிப்புடன் அகற்றும் பணி பெரம்பலூர் மாவட்டத்தில் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி பூலாம்பாடி, பேரூராட்சி பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், சுற்றுச் சூழலுக்கும், மனித சமுதாயத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள சீமைக் கருவேல மரங்கள் உள்ளது. மேலும், சீமைக் கருவேல மரங்கள் எத்தகைய சூழ்நிலையிலும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு வளர்வதாலும், பூமிக்கடியில் உள்ள நீராதாரத்தை விரைவில் உறிஞ்சி வளரும் தன்மை கொண்டதாலும், நிலத்தடி நீர்பாதிக்கப்படுகிறது. இதனால் நகர்ப்புறங்களில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இதனை முன்னிட்டு பூலாம்பாடி பேரூராட்சி பகுதியில் 23.09.2015 அன்று பேரூராட்சிக்கு சொந்தமான புல எண். 535.2ல் 18.96 ஹெக்டேர் பரப்பிலான நல்ல தண்ணீர் குளம் மற்றும் பெரியேரி முதல் சித்தேரி செல்லும் வரத்து வாய்க்கால் ஆகிய பகுதிகளில் அடர்ந்து வளர்ந்திருந்த சீமைக் கருவேல மரங்கள் அனைத்தையும் 15 வார்டு பேரூராட்சி பொது மக்களோடு, பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி துணைத் தலைவர், மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து அகற்றினர்.
பருவமழை தொடங்குவதற்கு முன்னர் நீராதாரங்களை தூர்வாரி சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டதால், பருவ மழையின் போது நீர் நிலைகளில் மழைநீரை சேமித்து, கோடைக் காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமலும், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில், சுற்றுச் சூழலை பாதுகாத்தும், மழைநீரை சேமிப்பதற்கும் இப்பணி பூலாம்பாடி பேரூராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.