பெரம்பலூர் : பெரம்பலூரில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கை நிருபர் மற்றும் போட்டோகிராபர் ஆகியோரை சரமாரியாக கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
தினசரி நாளிதழை சேர்ந்த பெரம்பலூர் (தினகரன்) நிருபர் வில்சன் மற்றும் போட்டோகிராபர் குணசேகரன் ஆகியோர் பெரம்பலூர் நகராட்சி 7 வார்டு பகுதியான ரோஸ் நகருக்கு நேற்று மதியம் 3 மணியளவில் செய்தி சேகரிக்க சென்றுள்ளனர்.
அப்போது இவர்களை பார்த்த அப்பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள் இங்கு என்ன செய்தி எடுக்க வந்த? இங்கு குறை இருக்குன்னு யார் சொன்னா ? என கேட்டு நிருபர் மற்றும் போட்டோகிராபர் ஆகியோரை தகாத வார்த்தையால் திட்டி ஓட ஓட கல்லால் மற்றும் கைகளால் சரமாரியாக கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அவர்களிடமிருந்து ஒன்றாகால் லட்சம் மதிப்புள்ள கேமரா, 3 செல்போன்களையும் போன்றவற்றை பறித்துக்கொண்டனர். அவர்களிடமிருந்து ஓடி சென்று நிருபர் மற்றும் போட்டோகிராபர் தப்பிச்சென்றனர். இதில் நிருபர் வில்சனுக்கு தலை, முகம் ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது.
அதே போல் போட்டோகிராபர் குணசேகரனுக்கு முகம் மற்றும் உடம்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது பற்றி தகவலறிந்த பெரம்பலூர் நிலமோசடி பிரிவு டி.எஸ்.பி., செல்லப்பாண்டியன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.ஐ.,க்கள் கணேசன், பழனிசாமி, பெரியசாமி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நிருபர் வில்சன் மற்றும் போட்டோகிராபர் குணசேகரன் ஆகியோரை பார்வையிட்டு ஆறுதல் கூறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்தனர்.
இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிந்து நிருபர் மற்றும் போட்டோகிராபர் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.