பெரம்பலுாரில் மர்ம நோய் தாக்குதலால் 24 செம்மறி ஆடுகள் பலியானயின. மேலும் 40 ஆடுகளுக்கு நோய் தாக்குதல் உள்ளதால் திருச்சி மண்டல கால்நடை நோய் புலணாய்வு குழுவினர் ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் போவளூர், கொம்பூதி, கடலுார் மாவட்டம் கொட்டாவரம் மற்றும் பரமக்குடியை சேர்ந்தவர்கள் சுமார் 1,200 ஆடுகளுடன் பெரம்பலுார் மாவட்ட பகுதிகளில் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆடுகளுக்கு வாய்ப்புண், சளி மற்றும் எச்சில் ஒழுகல், கால் புண், மேய்ச்சலுக்கு செல்லாமை போன்ற அறிகுறிகளுடன் மர்ம நோய் ஏற்பட்டது.
இதனால் முத்துக்குரி, பொன்னையாசீதாரி, கருப்பன், பூமாலை, செந்திக்குமார், ராமர், கிருஷ்ணன், பெரம்பலுார் மாவட்டம் அசூர் பூமாலை,42, நாட்டார்மங்கலம் பெரியசாமி ஆகியோரது 24 செம்மறி ஆடுகள் கடந்த ஒரு வாரமாக அடுத்தடுத்து இறந்தன. மேலும் 40 ஆடுகளுக்கு மர்ம நோய் தாக்குதல் இருந்து வருகிறது. இது குறி்த்து தகவலறிந்த திருச்சி மண்டல கால்நடை நோய் புலணாய்வு பிரிவு உதவி இயக்குனர் ராஜமாணிக்கம், உதவி மருத்துவர் முரளிதரன் ஆகியோர் தலைமையிலான 19 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பெரம்பலுார், அசூர், துறைமங்கலம், நாட்டார்மல்கலம், வடக்குமாதவி சாலை ஆகிய இடங்களில் உள்ள ஆடுகளை நேரில் பார்வையிட்டு நேற்று காலை ஆய்வு செய்தனர்.
இது குறி்த்து திருச்சி மண்டல கால்நடை நோய் புலணாய்வு பிரிவு உதவி இயக்குனர் ராஜமாணிக்கம் கூறுகையில், நோய் தாக்குதலுக்கான ஆடுகளின் சளி, ரத்தம் ஆகியவற்றின் மாதிரி எடுக்கப்பட்டு, ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பரிசோதனை முடிவு வந்தபின் ஆடுகளுக்கு ஏற்பட்டுள்ள நோய் குறி்த்து தெரியவரும். நோய் தாக்குதலுக்குள்ளான ஆடுகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்