பெரம்பலுார் : பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள வெங்கனுார் கிராமத்திற்கும்–சேலம் மாவட்டம் கவர்பனை கிராமத்திற்கும் இடையே உள்ள சுவேதநதி ஆற்றங்கரையில் தற்போது பெரிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் வழியே செல்லும் கனரக வாகனங்கள் வெங்கனுார் கிராமத்தின் அம்பேத்கர் நகரில் உள்ள சிமெண்ட் சாலை வழியே அதிவேகமாக சென்று வருவதாக தெரிகிறது. இதனால் விபத்து ஏற்படும் என அச்சம் தெரிவித்த மக்கள் கனரக வாகனங்களுக்கு மாற்றுப்பாதை அமைக்குமாறு கோரிக்கைவிடுத்ததுடன் பெரியம்மாபாளையம் பஞ்சாயத்து சார்பில் இதற்கான இடத்தையும் ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளனர்.
ஆனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இக்கிராம பொதுமக்கள் இன்று காலை 8.30 மணியளவில் பெரம்பலுார்–ஆத்தூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இத்தகவலறிந்த வேப்பந்தட்டை தாசில்தார் தமிழ்ச்செல்வன், அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் தங்கவேல், பி.டி.ஓ., செந்தில் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தின்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் பெரம்பலுார் – ஆத்துார் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.