பெரம்பலூர் : பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் உள்ள பஞ்ச பாண்டவருக்கு தனிசன்னதியும், வியாக்ரபாதர் முனிவர் வழிபட்ட பெருமை பெற்ற மரகத வல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் 22- வது ஆண்டு ஆடி (18ம்) பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி பெரம்பலூர் நகரைச் சேர்ந்த ஏறத்தாழ 230க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திருச்சிக்கு சென்று காவிரி ஆற்றில் தீர்த்தத்தை குடங்களில் சுமந்து பாதயாத்திரையாக சிறுவாச்சூர் வழியாக பெரம்பலூர் வந்தடைந்தனர்.
ஆடிப்பெருக்குவிழாவை முன்னிட்டு வெள்ளந்தாங்கி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட காவிரி தீர்த்த ஊர்வலத்தை நகர வர்த்தகர் சங்கத்தலைவர் பழனியாண்டி தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், வெள்ளந்தாங்கி அம்மன் கோவில் பரம்பரை தர்மகர்த்தா தர்மராஜன், கீற்றுக்கடை குமார், மதனகோபாலசுவாமி கோவில் முன்னாள் அறங்காவலர் தெ.பெ.வைத்தீஸ்வரன், பூக்கடை சரவணன், வார்டு கவுன்சிலர் லட்சுமிசரவணன், வர்த்தக பிரமுகர்கள் அங்கு மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அதிர்வேட்டுகள், மேளதாளம் முழங்க தெற்குத்தெரு, கடைவீதி. தேரடி வழியாக மதனகோபாலசுவாமி கோவிலுக்கு காவிரிதீர்த்தகுடங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
ஊர்வலத்தில் இளைஞர்கள் கோவிந்தா, கோபாலா என்ற கோசத்துடன் வந்து, மதனகோபாலசுவாமி கோவிலில் கம்பம் ஆஞ்சநேயருக்கு காவிரி தீர்த்த அபிசேகம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து கம்பம் ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவிக்கப்பட்டு மகாதீபஆராதனை நடந்தது.