பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே ஓட்டலில் மதுபானங்கள் விற்றதாக ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர் புறநகர் நான்கு ரோடு – செங்குணம் பிரிவு பாதை இடையே ஆட்டுக்கறியுடன் விருந்து கொடுப்பதாக விளம்பரப்படுத்தி ஒரு ஓட்டல் இயங்கிவந்தது.
இந்த ஓட்டல் உள்ள இடத்தை எசனையை சேர்ந்த சுரேஷ் (வயது36) தரை வாடகைக்கு எடுத்து ஓட்டலை நடத்திவந்தார்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களின் டிரைவர்கள் உள்பட இக்கடைக்கு வழக்கமாக வருபவர்களுக்கு கறி உணவுடன் மதுபானங்களும் விற்பனை செய்யப்பட்டுவருவதாக பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு போலீசாருக்கு புகார்கள் சென்றது.
அதன்போல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர் உத்திரவின்பேரில் மதுவிலக்கு போலீசார் நேற்றுமுன்தினம் அந்த கடைக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஓட்டலில், புதுவை மாநிலத்தில் இருந்து குவார்ட்டர் மதுபான பாட்டில்களை வாங்கிவந்து, தமிழ்நாட்டின் டாஸ்மாக் மது என்று கூறி மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த ஓட்டலில் ஒரு அறையில் 2 சாக்குமூட்டைகளில் சுமார் 300 குவார்ட்டர் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஓட்டல் உரிமையாளர் சுரேஷ் மற்றும் அவரது உறவினர்கள் செல்வராஜ் (45) மற்றும் சவுந்தர்ராஜன் (48) ஆகிய 3 பேரையும் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் மாஜிஸ்திரேட்டு சுஜாதா முன்பு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி கைதான 3 பேரையும் 15 நாள் சிறையில் அடைக்க உத்திரவிட்டார்.