பெரம்பலூரில் மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி சித்தர் வழிபாட்டு மன்றம் சார்பில், கஞ்சிக்கலய ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி சித்தர் வழிபாட்டு மன்றத்தின் 36 ஆம் ஆண்டுத் தொடக்க விழா மற்றும் ஆடிப்பூர விழா சனிக்கிழமை காலை குருபூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, கலச விளக்கு வேள்வி பூஜை, இன்று காலை அக்னிச் சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, மாலையில் பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலையம் எதிரே தொடங்கிய கஞ்சிக்கலய ஊர்வலம் பாலக்கரை, கடைவீதி, கனரா வங்கி, பழைய பேருந்து நிலையம், சங்குப்பேட்டை வழியாகச் சென்று புதிய மதனகோபால புரத்தில் அமைந்துள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தை அடைந்தது.
இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் சிவப்பு உடையணிந்து, கஞ்சிக் கலயத்துடன் பங்கேற்றனர்.
பின்னர், பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை, சித்தர் வழிபாட்டு மன்ற உறுப்பினர்கள் செய்திருந்தனர்.