பெரம்பலூர் : பெரம்பலூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் சித்த வைத்தியர் கொடுரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரிருந்து ஆலம்பாடி செல்லும் சாலையில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. அங்கு ஸ்ரீதர்பாபு மனைவி லதா(35). இவரது கனவர் ஸ்ரீதர்பாபு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டதால் மகன்கள் குமரேசன் (எ) ராகவேந்திரா(21), கார்த்திக்(17), விக்னேஷ் ஆகிய மூவருடன் வசித்து வருகிறார்.
இதனிடையே 9ம்வகுப்பு வரை படித்த குமரேசன் குடும்ப வறுமையின்காரணமாக கல்வியை தொடர முடியாமல் திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கார்த்திக் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் துறையூர் சாலையில் லாடபுரம் பிரிவு சாலை பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லதாவிற்கும், பெரம்பலூர் மதனகோபாலபுரம் பகுதியில் சித்தா வைத்திய சாலை நடத்திவரும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தை சேர்ந்த சித்தா வைத்தியரான ஐய்யப்பன்(42), என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் கள்ளத்தொடர்பாக மாறி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனையறிந்த லதாவின் மூத்த மகன் குமரேசன்(எ) ராகவேந்திரா தாய் லதா மற்றும் அவரது கள்ளகாதலன் ஐய்யப்பன் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் குமரேசனின் கண்டிப்பை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளாத லதாவும், ஐய்யப்பனும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த குமரேசன்(எ) ராகவேந்திரா கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் திருப்பூரிலிருந்து வந்தவர் மீண்டும் வேலைக்கு செல்லாமல் பெரம்பலூரிலிலேயே தங்கி விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு லதாவின் வீட்டிற்கு ஐய்யப்பன் சென்றவர் அங்கேயே தங்கியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து இன்றுஅதிகாலை வழக்கம் போல் லதா பழ வியாபாரத்திற்காக பெரம்பலூர் வடக்கு மாதவிசாலையிலுள்ள உழவர் சந்தைக்கு சென்று விட்டார்.
இதனையறிந்த குமரேசன்(எ) ராகவேந்திராவும், அவரது நண்பரான பெரம்பலூரை சேர்ந்த அப்துல்ரசாக் மகன் முஹம்மதுஹாசீம்(21)என்பவரும் சேர்ந்து, பெரம்பலூரில் ஆலம்பாடி சாலையிலுள்ள சமத்துவபுரத்தில் லாதவின் வீட்டில் தனியாக இருந்த ஐய்யப்பனை சரமாரியாக வெட்டி கொடுரமாக கொலை செய்து விட்டு பெரம்பலூர் காவல்நிலையத்தில் இருவரும் சரணடைந்தனர்.
இதுபற்றி தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் ஏடிஎஸ்பி விஜயபாஸ்கர் தலைமையில் டிஎஸ்பி.,கார்த்திக் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலையுண்ட ஐய்யப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயின் கள்ளக்காதலை மகன் கண்டித்தும்,கேட்காததால் ஆத்திரமடைந்த அவரது மகன் நண்பருடன் சேர்ந்து தாயின் கள்ளக்காதலனைகொடுரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது