பொங்கல் திருநாளை ஏழை, எளிய, சாமானிய மக்கள் சீரோடும் சிறப்போடும் கொண்டாடும் வகையில், முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, 318 கோடி ரூபாய் செலவில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு மற்றும் 100 ரூபாய் ரொக்கம் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு, பொங்கல் திருநாளுக்கு முன்னரே நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் நேற்று என்று அறிவித்து இருந்தார்.
அதன்படி, பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டை உடைய குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் ஆகிய 1 கோடியே 91 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கிடும் அடையாளமாக 5 குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினைய சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று வழங்கி துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் நியாய விலைக்கடையில் இன்று (7.1.2016) முதற்கட்டமாக 104 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு மற்றும் 100 ரூபாய் ரொக்கம் ஆகியன அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பினை பெரம்பலூர் நடாளுமன்ற உறுப்பினர் பி.மருதராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி ஆகியோர் வழங்கினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 629 அரிசி குடும்ப அட்டையுடைய குடும்ப அட்டைதார்களும், 351 காவலர்கள் குடும்ப அட்டைதாரர்களும், முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் 70 குடும்ப அட்டைதாரர்களும் ஆகமொத்தம் 1 லட்சத்து 69 ஆயிரத்து 50 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படவுள்ளது.
இதில் முதற்கட்டமாக இன்று 104 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு இன்று வழங்கப்பட்டது. மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.