பெரம்பலூர் : பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் பணியாளர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் உதவி கோட்டப் பொறியாளர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டத் தலைவர் தேவராசு தலைமை வகித்தார்.
மாவட்ட இணைச்செயலர் செல்வக்குமார், மாவட்டத் துணைத்தலைவர் முத்து, வ்ட இணைச்செயலர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், பணி நீக்கம் செய்யப்பட்டு, பணி இல்லாமல் இருந்த 41 மாத காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.
பணி நீக்கத்தால் உயிரிழந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு, வாரிசுப் பணி வழங்க வேண்டும். சாலை பராமரிப்பு பணியை தனியார் மேற்கொள்ள அனுமதிக்கும் தமிழக அரசின் முடிவை கைவிட்டு, அரசு ஏற்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், மாவட்டச் செயலர் க. மணிவேல், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி. ஆளவந்தார். மாவட்டச் செயலர் பி. தயாளன், தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலர் ஆர். முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வட்டச் செயலர் மனோகரன் நன்றி கூறினார்