பெரம்பலூர் ரோஸ் நகரை சேர்ந்தவர் காஜா முகைதீன் (வயது 50). இவரது மனைவி மும்தாஜ் பீவி(48). இவர்களது மகன் அப்துல்அஜிஸ் (16). இவர் ப்ளஸ்–1 படித்து வந்தார்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் அப்துல்அஜிஸ், அவரது தாய் மும்தாஜ் பீவியை அழைத்து கொண்டு விஸ்வக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் இரவு இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டனர். அப்துல்அஜிஸ் மோட்டார் சைக்கிளை ஓட்ட, மும்தாஜ் பீவி பின்னால் அமர்ந்திருந்தார்.
பெரம்பலூர்–ஆத்தூர் சாலையில் உள்ள சுடுகாடு அருகே வந்து கொண்டு இருந்த போது , சாலையின் நடுவே உடைத்து போடப்பட்டிருந்த கான்கீரிட் தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். பலத்த காயமடைந்த அப்துல்அஜிஸ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.மும்தாஜ் பீவி படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மும்தாஜ்பீவியை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அப்துல்அஜிஸ் உடல் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
பெரம்பலூர்– ஆத்தூர் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர்கள் அகற்றப்பட்டு புதிதாக தடுப்புசுவர்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அகற்றப்பட்ட தடுப்பு சுவர்கள் அங்கிருந்து அகற்றப்படுவதில் போதுமான எச்சரிக்கை இல்லாமல் சாலையில் நடுவிலேயே கிடத்தப்ட்டுள்ளது. இதன் காரணமாக விபத்து நிகழ்நதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இது குறித்து பெரம்பலூர் போலீசார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.