பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் எதிரே, எறையூர் சர்க்கரை ஆலையை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் ஏ.கே. ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் சுமார் ரூ. 14 கோடி நஷ்டப்படுத்திய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்க்கரை ஆலையை பாதுகாக்கவும், 18 மெகாவாட் மின்சாரமும், நவீனப்படுத்தப்பட்ட ஆலையை உடனடியாக தொடங்க வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள பரிந்துரை விலையுடன் மாநில அரசு ஒரு டன் கரும்புக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை ஆலை நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் மாநிலக்குழு உறுப்பினர் அ. வேணுகோபால், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் என். செல்லதுரை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ. அன்பழகன், முன்னாள் வட்டத் தலைவர் ஆர். வேல்முருகன், சங்க நிர்வாகிகள் என். காமராஜ், எஸ். கருப்பு, வி. நாகராஜன், வி. ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.