பெரம்பலூர்: அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 600க்கும் மேற்ப்பட்ட ஆசிரியர்களை 150 கிலோ மீட்டர் தூரம் அலைக்கழித்து பெரம்பலூரில் தேர்தல் பயிற்சி அளிப்பதாக குற்றம் சாட்டியவர்கள், பயிற்சி வகுப்பை புறக்கணித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளில் பணியாற்றிட அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தை சேர்ந்த 600க்கும் மேற்ப்பட்ட ஆசிரியர்கள் தேர்தல் அலுவலர்களாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பெரம்பலூர் துறையூர் சாலையிலுள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்த பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட 600-க்கும் மேற்ப்பட்ட ஆசிரியர்களை நாள் தோறும் 150 கிலோ மீட்டர் தூரம் மாவட்டம் விட்டு மாவட்டம் அழைக்கழித்து பெரம்பலூரில் தேர்தல் பயிற்சி அளிப்பதாகவும்,பயிற்சி மையத்திற்கு வந்து செல்ல நான்கு பேருந்துகள் மாறி, மாறி பயணிப்பதால் மிகவும் சிரமத்திற்கு ஆளாவதோடு, சோர்வடைந்து தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும்,
இதனை தவிர்த்திட செந்துறை பகுதியிலேயே பயிற்சி வகுப்பை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் பலமுறை கோரிக்கை விடுத்தும் தேர்தல் நடத்தும் அலுவலர் அதை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை என குற்றம் சாட்டி பயிற்சியில் பங்கேற்க வந்திருந்த ஆசிரியர்கள் இன்று பயிற்சி வகுப்பை புறக்கணித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பெரம்பலூர் துறையூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.
ஆசிரியர்களின் இந்த திடீர் சாலை போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பெரும் பரபரப்பும் ஏற்பட்டது