பெரம்பலூரில் நடந்த பேரவைக் கூட்டத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கருப்பு பேட்ஜ் அணிந்து காதுகளை மூடி விவசாயிகள் நூதன போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
பெரம்பலுார் துறைமங்கலத்தில் எறையூர் சர்க்கரை ஆலையின் 38 ஆம் ஆண்டு பேரவை, பங்குதாரர்கள் கூட்டம் சர்க்கரைத் துறை இயக்குநர் மகேசன்காசிராஜன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். கூட்டம் தொடங்கியதும் பெரம்பலுார் சர்க்கரை ஆலையை நவீனப்படுத்த வேண்டும். இணை மின் தி்ட்டத்தை செயல்படுத் த வேண்டும். நிகழாண்டுக்கான அரவை பருவத்தில் கரும்புக்குரிய தொகையை விவசாயிகளு்ககு வழங்க முன்பண சுழற்சி நிதியை, வட்டியி்ல்லா கடனாக ரூ. 102 கோடியை ஆலைக்கு அரசு வழங்க வேண்டும். மாநில அரசு கரும்புக்கான பரிந்துரை விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும்.
கடந்த ஆண்டு சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பேரவை கூட்டத்துக்கு முன் விவசாய சங்க பிரதிகளுடன் சர்க்கரைத் துறை ஆணையர் முன் மாதிரி கூட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மனுக்கள் மூலமாகவும், போராட்டங்கள் வாயிலாகவும் அரசுக்கு தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, இக்கோரிக்கைகளை தமிழக அரசுக்கு தெரிவிக்கும் வகையில் அனைத்து விவசாயிகளும் எழுந்து, தங்களது காதுகளை மூடிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பி்ல் சர்க்கரை துறை இயக்குநர் மகேசன்காசிராஜனிடம் வழங்கினர். இதில், விவசாய சங்க பிரதிநிதிகள் என். செல்லதுரை, அன்பழகன், அ. வேணுகோபால், எஸ். முருகசேன், ராமலிங்கம், ஏ.கே. ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.