பெரம்பலூரில் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஆயுள் காப்பீட்டுக் கழகம் சார்பில் பிரதமரால் அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வரும் பிரதம மந்திரியின் ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டங்களின் சிறப்பு விளக்க கூட்டம் பெரம்பலூர் ஸ்ரீ கர்ணம் சகுந்தலம் திருமண மஹாலில் இன்று மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
நமது பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் சமூக பாதுகாப்புத்திட்டங்களான பிரதம மந்திரி ஜுவன் ஜோதி, பீமா யோஜனா, பிரதம மந்திரி சுரக்ஷர் பீமா யோஜனா, அட்டல் ஓய்வூதிய திட்டம், பிரதம மந்திரி முத்ரா யோஜனா மற்றும் ரக்ஷபந்தன் வைப்புநிதித் திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு, காப்பீடு திட்ட விதிமுறைகள், திட்டத்தின் பலன்கள் மற்றும் பிரதம மந்திரியின் சமூகப்பாதுகாப்புத் திட்டங்களை மேலும் பிரபலப்படுத்தவும், மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த விளக்கக் கூட்டத்தின் நோக்கமாகும்.
பிரதம மந்திரியின் விபத்து காப்பீடு, ஓய்வூதியத் திட்டத்தினை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க உரிய நடவடிக்கைகளை அலுவலர்கள் எடுக்க வேண்டும்.
பெரம்பலூர் மாவட்ட மக்கள் அனைவரும் இணைத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் பொது மக்கள் வங்கிகளின் முக்கியத்துவத்தையும் கடன்களை சரியான முறையில் கால அவகாசத்திற்குள் திருப்பிச்செலுத்துவது பற்றியும் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும்.
மேலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் வழங்கப்படும் கல்விகடன், பயிர்கடன் மற்றும் குறைந்த வட்டியில் வழங்கப்படும் கடன்களைப் பற்றி முறையாகத் தெரிந்து கொண்டு பயன்பெறுமாறும், உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துமாறும் அறிவுறுத்தினார்.
இதன் மூலம் விவசாய மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்ததை உயர்த்துவதில் வங்கிகள் பெரும்பங்கு வகிக்கின்றன என்றும் இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் அமைத்துள்ள ஸ்டால்களை அனுகி, காப்பீடு திட்டத்தில் பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் இது போன்ற விழிப்பணர்வு கூட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற்றால் மக்களுக்குப் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் ஐ.ஓ.பி வங்கி அதிகாரிகள், ஆயுள் காப்பீட்டு கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.