பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவைகளுடன் இணைந்து நடத்தும் 5வது பெரம்பலூர் புத்தகத் திருவிழா பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் வரும் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 7 வரை நடைபெற உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்ததைச் சேர்ந்த இலக்கியப் படைப்பாளிகளின் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், புத்தகத் திருவிழா 5ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையும் குறிக்கும் வகையிலும்; சிறுகதை மற்றும் கவிதைப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
இப்போட்டியில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த படைப்பாளிகள் மட்டுமே பங்கேற்கலாம். கவிதைகள் கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் இயற்றப்பட வேண்டும்.
1. காலடியில் தொடங்கும் உயரங்கள்
2. வெளிச்சம் படா மானுடம்
3. மவுனத்தின் இசை
சிறுகதைகள் எந்த தலைப்பின் கீழும் எழுதப்படலாம்.
இரு போட்டிகளிலும் ஒருவரே கலந்து கொள்ளலாம். எனினும் ஒருவர் இரு பிரிவுகளிலும் ஒரு படைப்பை மட்டுமே அனுப்ப வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புகளை அனுப்புவோரின் படைப்புகள் நிராகரிக்கப்படும். படைப்புகள் ஏ4 அளவுள்ள நகல் எடுக்கும் தாளில் ஒரு பக்கம் மட்டுமே எழுதப்பட வேண்டும்.
கவிதைகள் 30 முதல் 40 வரிகளுக்குள் இருத்தல் வேண்டும். சிறுகதை ஒவ்வொரு பக்கத்திலும் 25 வரிகளுக்கு மிகாமல் A4 அளவுள்ள நகல் எடுக்கும் தாளில் 6 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
படைப்புகள் கையால் எழுதப்பட்டதாகவோ அல்லது தட்டச்சு செய்யப்பட்டதாகவோ இருக்க வேண்டும். தட்டச்சு செய்து மின்னஞ்சலில் அனுப்புவோர் ‘Bamini-Tamil Font’ இல் தட்டச்சு செய்து அனுப்பிடல் வேண்டும்.
போட்டியாளர்கள் தங்களது படைப்புகளை admin@perambalurbookfair.in , என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது பதிவஞ்சல், விரைவஞ்சல் மற்றும் கூரியர் மூலமாக “மக்கள் சிந்தனை பேரவை, 175F/12K ராஜா நகர் முதல் தெரு, துறைமங்கலம், பெரம்பலூர் 621220’ என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
நேரிலோ அல்லது சாதாராண அஞ்சல் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பெறப்பட மாட்டாது. இப்போட்டியில் கலந்து கொள்ள வயது வரம்பு ஏதுமில்லை. படைப்புகளை அனுப்புவோர் தமது பெயர். வயது, அஞ்சல் முகவரி, தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை தனித் தாளில் எழுதி கீழே ஒப்பமிட்டு இணைக்க வேண்டும்.
படைப்புகள் அனுப்ப வேண்டிய கடைசிநாள் 28.1.2016 நள்ளரவு 12 மணி. வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.2000, இரண்டாவது பரிசாக ரூ.1000 மதிப்புள்ள பரிசுக் கூப்பன்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது. என ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன் தெரிவித்துள்ளார்.