பெரம்பலூர் : பெரம்பலூரில் பூட்டப்பட்ட 2 வீடுகளின் பூட்டை உடைத்து, ரூ. 6 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரூ. 60 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
பெரம்பலூர் சாமியப்பா நகரை சேர்ந்தவர் சுரேஷ். வேப்பந்தட்டையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு, அறுவை சிகிச்சை செய்வதற்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனால், கடந்த 2 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு அவரது மனைவி பாக்கியலெட்சுமி (25) திருச்சிக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இன்று மதியம் சுரேஷ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தையறிந்த, அப்பகுதியை சேர்ந்த நபர்கள் பாக்கியலட்சுமி தகவல் அளித்தனர்.
பின்னர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்து 21 பவுன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதேபோல, அதேபகுதியை சேர்ந்த கருணாநிதி மனைவி புனிதவதி (43), கடந்த 4 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உப்பிலியபுரம் கோயில் திருவிழாவுக்காக சென்றுவிட்டார்.
இதனிடையே, சென்னையில் படித்து வந்த அவரது மகள் ஸ்ரீவர்ஷினி தனது உறவினருடன் வீட்டுக்கு இன்று வந்தார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்து 8 பவுன் நகை, வெள்ளி பொருள்கள் மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
மேற்கண்ட 2 வீட்டிலும் சுமார் ரூ. 6 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.