பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த வெண்பாவூர் தேவராஜன் மீது நிலப்பிரச்சினை தொடர்பாகவும், இளங்கோவன், அண்ணாதுரை ஆகியோர் மீது பொய் வழக்கு பதிவு செய்து இளங்கோவன், அண்ணாதுரை இருவரையும் கைது செய்த பெரம்பலூர் போலீசாரை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கடந்த 17-ந்தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2-வது கட்டமாக வழக்கறிஞர்கள் 2 நாட்கள் தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வழக்கறிஞர் இளங்கோவன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கறிஞர்களை தாக்கிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும்,
பெரம்பலூர் போலீசாரை கண்டித்தும் இன்று வழக்கறிஞர்கள் கண்டன ஊர்வலம் மற்றம் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.
இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். போலீஸ் தடையை மீறி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் இறங்கினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கருதிய போலீசார்,
வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வள்ளுவன்நம்பி, செயலாளர் சுந்தரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளை அழைத்து ஏடிஎஸ்பி விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் செல்வபாண்டியன், சந்திரசேகர், விஜயராகவன், குமாரவேலு கோவிந்தராஜ் ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பெரம்பலூர் மாவட்ட போலீசார் மீது வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். வழக்கறிஞர்களை தரக்குறைவாக நடத்துவதை கைவிட வேண்டும். வாதிகள் தரப்பில் காவல் நிலையம் செல்லும் வழக்கறிஞர்கள் அவமரியாதை செய்யப்படுவதை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தடுக்க வேண்டும்.
மாவட்டம் முழுவதும் இதில் கிராமங்கள் தோறும் போலீசார் மாமூல் வாங்கி கொண்டு சந்துக்கடை மதுபான விற்பனையை ஊக்கப்படுத்திவருவதாகவும்,
பெரம்பலூர் மாவட்டத்தில் 2005-ஆம் ஆண்டு முதல் நடந்துள்ள 174 ஐ.பி.சி. வழக்குகளை தீர்வு ஆகாமல் காவல் நிலையத்திலேயே முடக்கப்பட்டு பாதியில் கைவிடப்பட்டுள்ளதற்கு தீர்வுகாணவேண்டும் என்றும்,
வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு காரணமான பெரம்பலூர் போலீசாரை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து எஸ்பியிடம் பேசி, இன்னும் ஒருவாரத்திற்குள் உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் என்று காவல் துறை அதிகாரிகள் வழக்கறிஞர்களிடம் தெரிவித்ததால், தற்காலிகமாக சமரசம் ஏற்பட்டது.
ஆனால் இன்னும் 2 நாட்களில் வழக்கறிஞர்களின் கோரிக்கையை காவல் துறை நிறைவேற்றாவிட்டால், கண்டன ஊர்வலம் மற்றும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்
நடத்தப்படும் என்று வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.