state_level_exibhitionகடந்த நான்காண்டுகளில் கல்வித்துறைக்கென்று ரூ.85,650 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பெரம்பலூரில் நடந்த மாநில அளவிலான கல்வி கண்காட்சியை துவக்கி வைத்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணி தகவல்

பெரம்பலூர்: தமிழகத்தில் முதன்முறையாக அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற மாநில அளவிலான 43 வது ஜவஹர்லால் நேரு அறிவியல் மற்றும் கணிதக் கண்காட்சி நடைபெற்றது. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வந்த மாநில அளவிலான அறிவியல் மற்றும் கணித கண்காட்சி முதல் முறையாக நமது பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறுவது என்பது வராலாற்று சிறப்பு மிக்கதாகும். ஏனெனில் தமிழக முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களால் பெரம்பலூர் மாவட்டம் சிறப்பானதொரு முன்னேற்றம் அடைந்து வருகின்றது.

மக்கள் வாழ்க்கையை எளிமைப்படுத்தும் பல்வேறு விதமான புதிய கண்டுப்பிடிப்புகளை இன்றைய கால இளைய சமுதாயம் கண்டுப்பிடிக்க முன்வர வேண்டும் என்பதற்காக தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இத்தகைய அறிவியல் கண்காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார். மேலும், மாணவர்களின் எதிர்காலம் கருதியும், அவர்களது உடல்நலத்தில் அக்கறை கொண்டும் தமிழக முதலமைச்சர் ரூ.10 கோடி நிதி ஒதுக்கி செய்து விளையாட்டுத்துறையிலும் மாணவர்கள் ஈடுபட ஊக்கம் அளித்து வருகிறார்கள்.

கடந்த நாண்கான்டுகளில் கல்வித்துறையின் செயல்பாடுகளுக்காக ரூ.85,650 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சரித்திர சாதனை புரிந்துள்ளார். 7ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகளுக்கு சதுரங்கப்போட்டிகள் நடத்துவதற்கு ரூ.22லட்சம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

மேலும், தொலைநோக்குப் பார்வை 2023 திட்த்தின்கீழ் தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக மாற்றிட தமிழக முதலமைச்சர் பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றார்கள். இத்திட்டத்தின் படி தமிழகத்தை முன்னேற்றிட இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்த தமிழக முதலமைச்சர், பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி அறிவை மேம்படுத்திட 14 வகையான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகின்றார்கள். அதில் மிக முக்கியானது விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டமாகும். இத்திட்டத்தினை பல்வேறு மாநிலங்களும் தங்களது மாநிலத்தில் செயல்படுத்திட தமிழகத்தை வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இருந்த போதிலும் வேறெந்த மாநிலமும் ஓராண்டுக்கு மேல் இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திட முடியவில்லை. ஆனால் தமிழகத்தில் தமிழக முதலமைச்சரின் உத்தரவின்பேரில் தொடர்ந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் பொருளாதார காரணங்களால் உயர்கல்வி பயில இயலவில்லை என்ற நிலை எவருக்கும் ஏற்ப்பட்டு விடக்கூடாது என்ற காரணத்தினால் தமிழக முதலமைச்சர் அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவ, மாணவ, மாணவிகளின் பெயரில் ரூ.5,000 வைப்பு நிதியாக சேமிக்கப்படுகின்றது. இதில் 10ஆம் வகுப்பில் ரூ.1,500ம், 11ஆம் வகுப்பில் ரூ.1,500ம், 12ஆம் வகுப்பில் ரூ.2000மும் ஆகமொத்தம் ரூ.5,000 வைப்புத்தொகையாக கொடுக்கப்பட்டு 12 ஆம் வகுப்பு முடித்து வெளியில் வரும் மாணவ,மாணவிகளுக்கு ரூ.6,500ஆக வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டங்கள் மூலமாக தமிழகத்தில் உயர்கல்விக்கு செல்லும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை சமீப காலமாக பெரும் அளவில் உயர்ந்து வருகின்றது.

அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும் என்ற காரணத்தினால் தமிழக முதலமைச்சர் கடந்த நாண்காண்டுகளில் புதிதாக 72,556 ஆசிரியர்களை நியமித்துள்ளார். இதன் மூலம் தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசு அமையப்பெற்றபின் கடந்த ஆண்டு மேல்நிலைப் பொதுத்தேர்வில் தமிழகத்தில் 150 அரசு மேல்நிலைப்பள்ளிகளும், 1,163 உயர்நிலைப்பள்ளிகளும் 100 சதவீ தேர்ச்சி என்ற உன்னத நிலையை எட்டியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்ற நிலையை மாற்றி, கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தில் கல்வி மாவட்ட அளவில் 27 வது இடத்திலிருந்த பெரம்பலூர் மாவட்டம் இந்த ஆண்டு 2ஆம் இடத்தைப்பெற்றுள்ளது. அதுமட்டுமல்ல பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப்பள்ளியில் பயின்று மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பிற்குத்தேர்ச்சி பெற்றவர்கள் 32 பேர். இதில் 5 நபர்கள் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். தமிழக முதலமைச்சரின் கல்வி சார்ந்த திட்டங்கள் மாணவ,மாணவிகளின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு பெரம்பலூர் மாவட்டம் ஓர் உதாரணம்.
இவ்வாறு அவர் பேசினார்.

இக்கண்காட்சியில் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம், வளமேலாண்மை, தொழிற்சாலைகள் மேம்பாடு, விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, கணித வாழ்க்கை என்ற 6 தலைப்புகளின் கீழ் படைப்புகள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 2 தனிநபர் மாணவர் படைப்பும், 1 இருநபர் மாணவர் படைப்பும், 1 அறிவியல் ஆசிரியர் படைப்பும், 1 கணித கருத்தரங்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள 32 மாவட்டங்களிலிருந்தும் மாணவர்களின் அறிவியல் படைப்பு 94ம், ஆசிரியர்கள் அறிவில் படைப்பு 28ம், மாணவர்களின் கணித படைப்புகள் 24ம் ஆகமொத்தம் 146 படைப்புகள் 32 அரங்குகளில் இடம் பெற்றிருந்தன். இதில் குறிப்பாக வள மேலாண்மை என்ற தலைப்பில் அதிக பட்சமாக 42 படைப்புகளும், தொழிற்சாலைகள் மேம்பாடு என்ற தலைப்பில் 23 படைப்புகளும், பேரிடர் மேலாண்மை என்ற தலைப்பின்கீழ் 18 படைப்புகளும் இடம்பெற்றிருந்தன. அனைத்து அரங்குகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சென்று மாணவ,மாணவகளின் படைப்புகளைப் பார்வையிட்டு அதற்கான விளக்கங்களை கேட்டறிந்து, மாணவ,மாணவகளைப் பாராட்டி உற்சாகப்படுத்தினார்.

இன்று மட்டும் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலிருந்தும் சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் இக்கண்காட்சியை கண்டுகளித்தனர். இக்கண்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சியாக அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் கண்டுபிடிப்புகளை மாணவ,மாணவிகள் தொடுதிரையின் மூலம் தெரிந்துகொள்ளும் வகையில் தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. தொடந்து 3 நாட்கள் இக்கண்காட்சியில் அறிஞர்களின் உரைகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சோனல்சந்திரா, சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன், சார்ஆட்சியர் ப.மதுசூதன்ரெட்டி, நகர்மன்றத் துணைத் தலைவரும், அதிமுக மாவட்ட செயலாளருமான ஆர்.டி.இராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சகுந்தலா கோவிந்தன், பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர்(நாட்டு நலப்பணிகள்) பி.பொன்னையா, முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்டக் கல்வி அலுவலர் இல.வெங்கடாஜலபதி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரா.எலிசபெத், மெட்ரிக்பள்ளி ஆய்வாளர் பி.வசந்தா, கீழப்பலூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் நா.அருணாச்சாலம் உள்ளிட்ட அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!