பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த செய்திகள் வதந்தி என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள கவுல்பாளையம் மலைப் பகுதிகளில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை சிறுத்தை வேட்டைடியதாக பொதுமக்கள் தெரிவித்த புகாரின் பேரில், கடந்த 2013 செப். 8 ஆம் தேதி கூண்டு வைத்து ஆண் சிறுத்தை ஒன்றை பிடித்த வனத்துறையினர், பவானி சாகர் வனச்சரகம், செங்குமராடா வனப்பகுதியில் அதை விட்டனர்.
தொடர்ந்து, பெரம்பலூர் அருகேயுள்ள உப்போடை, தில்லைநகர், கவுல்பாளையம் மலைப்பகுதி, காமராஜர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், இரண்டு குட்டிகளுடன் பெண் சிறுத்தை சுற்றியதை பொதுமக்கள் பார்த்ததாக கூறப்பட்டது. ஆனால், வனத்துறையினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் எவ்வித விலங்குகளும் இல்லை எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள வயல் பகுதிகளில் மர்ம விலங்கின் கால் தடம் இருப்பதாக, அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். தகவலறிந்து அங்கு சென்ற வனத்துறையினர் கால் தடங்களை பார்வையிட்டதில், அவை வன விலங்குகளின் தடயங்கள் இல்லை என தெரிவித்தனர்.
இதுகுறித்து, பெரம்பலூர் வனச்சரக அலுவலர் ரவீந்திரன் கூறியதாவது: மேற்கண்ட பகுதியில் இருந்த கால் தடங்களை வனச்சரகர்கள் பார்வையிட்டதில், அவை தெரு நாயின் கால் தடமாக உள்ளது. வன விலங்குகளுக்கான எந்த அடையாளமும் இருப்பதாக தெரியவில்லை. எனவே, இதுபோன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என அவர் தெரிவித்தார்.