படவிளக்கம்: விழாவில் கல்லூரி பேராசிரியரும் கவிஞருமான ஜெயந்தஸ்ரீபாலகிருஷ்ணன் பேசியபோது எடுத்தப்படம்
பெரம்பலூர் : பெரம்பலூரில் லயன்ஸ் சங்கத்தின் 324ஏ2 மாவட்டத்தின் 33-வது மாவட்ட அமைச்சரவை நிர்வாகிகள் பணி ஏற்புவிழா பூமணம் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
விழாவிற்கு மாவட்ட ஆளுநர் வேதநாயகம் தலைமை வகித்தார். இதில் விழாக்குழுத்தலைவர் ஷேக்தாவூத் வரவேற்றார். லயன்ஸ் சங்கத்தின் பன்னாட்டு இயக்குனர் (தேர்வு) ஈரோடு தனபால் மாவட்ட அமைச்சரவை நிர்வாகிகள், மாவட்ட, மண்டல, வட்டாரத் தலைவர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
நிகழ்ச்சியில் கோவை கல்லூரி பேராசிரியரும், கவிஞர், எழுத்தாளருமான கோவை ஜெயந்தஸ்ரீ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது, கல்வி கற்கும் குழந்தைகளிடத்தில் சொல்லமுடியாத சோகங்கள் உள்ளன. அவற்றை பெற்றோர்கள் செவிகொடுத்து கேட்டாலே பிரச்சனைகள் தீர்ந்துவிடும். பிறரிடத்தில் உள்ள நல்ல குணங்களை மனதார பாராட்டுங்கள். அது ஆரோக்கியமான உறவை வளா;க்கும். குழந்தைகளை கொண்டாடி, கொண்டாடி, உறவுகளை பேணி வளர்த்திடுங்கள் குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்திடும். பிறர் நமக்கு செய்த இடர்களை கடற்கரை மணலில் எழுதுவது போல வைத்துக்கொள்ளுங்கள்.
அலையும், காற்றும் அதனை கலைந்துபோகச்செய்யட்டும். பிறர் செய்த நன்மைகளை செதுக்கிய சிற்பம் போல என்றும் மனதில் வைத்திடுங்கள். குற்றம், குறைகள் மறைத்து பெருமை, புகழ் இவற்றுக்கு காரணமாக இருக்கும் மனைவியை விட சவுபாக்கியம் வாழ்க்கையில் வேறெதுவும் இல்லை.
வாழ்க்கையில் பணத்தை கொடுப்பது ஒருபுறம் இருந்தாலும் பிறருக்காக உங்கள் நேரத்தை கொடுங்கள். முகவரி தெரியாமல், முகம் அறியாமல் நாம் செய்யும் ஒவ்வொரு உதவியும் நமக்கு நன்மையை கொண்டுவந்து சேர்க்கும். என அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் 2015-2016 லயன்ஸ் ஆண்டின் கையேடு, ஹார்மனி இதழ் ஆகியவை வெளியிடப்பட்டன. இதில் மாவட்ட அமைச்சரவை ஆலோசகர் ராஜாராம், உடனடிமுன்னாள் மாவட்ட ஆளுநர் தஞ்சைபிரேம், மாவட்ட உதவி ஆளுநர்கள் வெங்கட்ராமன், டாக்டர் வீரபாண்டியன், மாவட்ட அவை செயலாளர் ஜனார்த்தனன், பெரம்பலூர் சங்கத்தலைவர் மோகன்ராஜ், விழாக்குழு பொருளாளர் தர்மராஜ் இணை செயலாளர் (கோனார் அரிசி கடை) குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் விழாக்குழு செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.