படவிளக்கம் : விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைக்கிறார் மாவட்ட ஆட்சியர் (பொ) ப. மதுசூதன்
பெரம்பலூர், ஜூன் 22: பெரம்பலூர் நகரில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில், மேற்கு வானொலி திடலில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் (பொ) ப. மதுசூதன் பேசியதாவது :
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஜூலை 1 ஆம் தேதி முதல் இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்வோர், பின்னால் அமர்ந்து செல்வோர் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் விபத்தின்போது தலையில் அடிபடாமலும், தேவையற்ற உயிரிழப்பைம் தவிர்க்க முடியும். எனவே, வாகன ஓட்டிகள் அனைவரும் வெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும் என்றார்.
மேற்கு வானொலி தொடங்கிய விழிப்புணர்வு பேரணி கனரா வங்கி, பழைய பேருந்து நிலையம், சங்குப்பேட்டை, பாலக்கரை, புறநகர் பேருந்து நிலையம் வழியாக சென்று ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் நிறைவடைந்தது.
பேரணியில் கலந்து கொண்ட வாகன ஓட்டுநர்கள், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து முழக்கமிட்டபடி சென்றனர். தொடர்ந்து, காமராஜர் வளைவு, பாலக்கரை ஆகிய பகுதிகளில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த துண்டறிக்கையை வாகன ஓட்டுநர்களிடம் விநியோகம் செய்யப்பட்டது.
இதில், நகர போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ், உதவி ஆய்வாளர் கலைச்செல்வன், பெரம்பலூர் மக்கள் சிந்தனைப் பேரவை செயலர் ஆ. துரைசாமி, நிர்வாகிகள் எம்.எஸ். மணிவண்ணன், மாதேஸ்வரன், சுத்தாங்காத்து, மகேஸ்குமரன், ஆசிரியர்கள் ராசபாண்டியன், வி. பாபுவாணன், ரவி, ராஜ்குமார், ராஜேஷ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.