பெரம்பலூர் நகராட்சிக்கு சொந்தமான குளத்தில், கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பத் திருவிழா இன்று இரவு நடைபெற்றது.
பெரம்பலூர் நகராட்சியின் பழைய அலுவலகம் அருகேயுள்ள கற்பக விநாயகர் மற்றும் ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான மண்டல பூஜையை முன்னிட்டு 11 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் பரம்பரை ஸ்தானீகம் வேதாகமச் சிரோன்மணி வி.என்.எஸ். சுவாமிநாத சிவாச்சாரியார் மற்றும் குருநாதர்கள் தலைமையில் கற்பத விநாயகர், ஐயப்பன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடும், அபிஷேக ஆராதணைகளும் நடைபெற்றது.
தொடர்ந்து, நேற்றிரவு குத்து விளக்கு பூஜையும், சனிக்கிழமை மாலை 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது. கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
அலங்கார தெப்பத்தேரில் ஐயப்பன் எழுந்தருளி, குளத்தில் வலம் வந்தது. இங்கு நடைபெறும் தெப்பத் திருவிழாவில் கலந்துகொண்டால் கல்வி, தொழில், செல்வம், விவசாயம், குழந்தைச் செல்வம், ஆரோக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இதில், பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை, துறைமங்கலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும், ஐயப்ப பக்தர்களும் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.