பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே அடுத்தடுத்து இரண்டு அரசுப்பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமுற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று இரவு மதுரையிலிருந்து சென்னை நோக்கி 33 பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து ஒன்று பெரம்பலூர் அருகே திருச்சி&சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பிரிவு பாதைக்கு முன்பு சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.
பேருந்தில் பயணம் செய்த அருப்புக்கோட்டையை சேர்ந்த சண்முகராஜ்(48), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த
லெட்சுமணன்(36), நாங்குநேரியை சேர்ந்த மூக்காண்டி உட்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து பற்றி தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் டி.டி.பி.எல் ஊழியர்கள் உதவியுடன் விபத்தில் காயமுற்றவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்துக்குள்ளான பேருந்தை ஓட்டி வந்த டிரைவரான திண்டிவனம்
அடுத்த அசூர் கிராமத்தை சேர்ந்த குமரேசனை(42) போலீசார் கைது செய்து
விசாரித்து வருகின்றனர்.
இதேபோன்று பெரம்பலூர் அருகே எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் முன்னே சென்று கொண்டிருந்த லாரியின் பின் பகுதியில் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த ஒரு அரசு பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் அந்த பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
போதிய ஓய்வு இல்லாமல் ஓட்டுநர்கள் இயக்குவதே விபத்துகளுக்கு காரணமென போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.