பெரம்பலூர் அருகே ஆட்டோவை திருட வந்த கும்பலில் ஒருவனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் நெய்குப்பை புதூரை சேர்ந்தவர் அபிபுல்லா (வயது50). லோடு ஆட்டோ சொந்தமாக வைத்துக்கொண்டு தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது வீட்டின் அருகே ஆட்டோவை நிறுத்தி விட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் ஆட்டோவை கடத்த முயன்றுள்ளனர். அப்போது சத்தம் கேட்டு அபிபுல்லா எழுந்து வந்து பார்த்த போது ஒருவன் ஆட்டோக்குள் இருப்பதும் மற்ற 2 பேர் ஆட்டோவை தள்ளிக்கொண்டு இருப்பதும் தெரிய வந்தது. அப்போது அபிபுல்லா சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து திருடர்களை பிடிக்க முயன்றனர். அப்போது ஒருவன் மட்டும் பொதுமக்கள் பிடியில் சிக்கினான். மற்ற இரண்டு பேர் அரண்டு தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட திருடனை பொதுமக்கள் வி.களத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட திருடன் யார் எந்த ஊர் எனவும், தப்பியோடிய 2 பேர் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.