பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கல்லூரி மாணவியை கிண்டல் செய்ததாக 3 பேரை பெரம்பலூர் காவல் நிலையத்தினர் கைது செய்தனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள கோனேரிபாளையம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சின்னையன் மனைவி சரஸ்வதி (60). இவரது பேத்தி கடந்த 9 ஆம் தேதி கல்லூரி சென்று வீட்டுக்கு வந்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கிண்டல் செய்ததாகவும், இதுகுறித்து, பெரம்பலூர் காவல் நிலையத்தில் சரஸ்வரி புகார் அளித்தும், போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையறிந்த, அதே கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன், செல்வா (எ), தமிழ்ச்செல்வன், டேவிட்பில்லா (எ) மதன், சூரியா, கோபிநாத், மஞ்சு (எ) தீபக் ஆகியோர் நேற்று, சரஸ்வதியின் வீட்டுக்கு சென்று கத்தியை காட்டி மிரட்டி, வீட்டில் உள்ள கண்ணாடிகளை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் சிலம்பரசன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 6 பேர் வழக்குபதிந்து, டேவிட்பில்லா (24), சூரியா (19), மஞ்சு (எ) தீபக் (24) ஆகியோரை இன்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.