பெரம்பலூர் அருகே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கி, இதுவரை முடிவடையாத செங்குணம் சாலையில் தொடர்ந்து நிகழும் விபத்துகளை தடுக்கவும், கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் அரசுப் பேருந்துகளை இன்று இரவு சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் கிராம தார்ச் சாலை மூலமே செங்குணம், சிறுகுடல், அருமடல் கீழப்புலியூர், பென்னகரம் உள்பட பல்வேறு கிராம மக்கள் பெரம்பலூர் வந்து செல்ல வேண்டும். இந்த தார்ச் சாலை சேதமடைந்ததை அடுத்து, சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், செங்குணம், முருக்கன்குடி, மங்களமேடு வரை சாலை அமைக்க ரூ. 1.25 கோடியும், 5 ஆண்டு பராமரிப்புப் பணிக்காக ரூ. 10 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தார்ச் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு சாலையில் ஜல்லி கற்கள் பரப்பப்பட்டன.
ஆனால், இதுவரை சாலைப் பணிகள் முடியாததால், அந்த வழியாக வாகனத்தில் செல்வோர் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். கடந்த மாதம் அந்த சாலையில் சென்ற தனியார் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து, இந்த சாலைப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் இன்று இரவு சென்றபோது, தவறி விழுந்து பலத்த காயமடைந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த, அந்த கிராமத்தை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு நெடுஞ்சாலைத் துறையினரை கண்டித்தும், சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், அவ்வழித்தடத்தில் சென்ற 2 அரசுப் பேருந்துகளை இன்று இரவு சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மருவத்தூர் காவல் நிலையத்தினர் அங்கு சென்று பொது மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.