பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டம் கவுள்பாளையம் கிராமத்தில் உள்ள மலையில் மேக்ஸிமக்ஸ் என்ற கல் குவாரி உள்ளது. இதை ஜெயபால் என்பவர் நிர்வகித்து வருகிறார்.
இந்த குவாரியில் இன்று மாலை 4 மணியளவில் பாறைகளை பிளக்க அதிக வெடி மருந்துகளை பயன்படுத்தி வெடி வைத்தனர்.
அப்போது குவாரியிலிருந்த பாறைகள் சிதறி விழுந்ததில் மலை அடிவாரத்துக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த ராஜா மகன் பூபதி,20, பரமன் மகன் சின்னதம்பி,26, கோவிந்தன் மகன் நாகராஜ்,26, ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
மேலும் வெடி விபத்தில் குவாரிக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பெருமாள், கோவிந்தன் ஆகியோரது வீட்டின் ஓடுகளும், மாரிமுத்து, பழனியப்பன் ஆகியோரது பசுமை வீட்டின் சுவரில் விரிசலும், ஏழுமலையின் கூரை வீட்டில் மேற்கூரையில் துவாரமும் விழுந்து லேசான சேதமாயின. இது குறித்து பெரம்பலுார் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.