பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே டூவீலர் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வங்காரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் ராமச்சந்திரன்(35), இவர் மாட்டு வண்டி வைத்து மணல் சப்பளை செய்து வந்தார். தனது மாட்டுக்கு தீவனம் (பருத்தி கொட்டைகள்) வாங்குவதற்காக டூவீலரில் இன்று பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள பருத்தி மில்லிற்கு அவரது நண்பவர் பிரபு என்பவருடன் வந்தார்.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று செங்குணம் பிரிவு பாதை என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியே சென்னையிலிருந்து, நாகர்கோவில் நோக்கி வந்த கார் ஒன்று ராமச்சந்திரன் ஓட்டிச்சென்ற டூவீலரில் மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ராமச்சந்திரன் தலையின் பின் பகுதியில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று ராமச்சந்திரனின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவத்தை நேரில் பார்த் ராமச்சந்திரனின் நண்பர் பிரபு அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த சென்னை சித்தலபாக்கம் பகுதியை சேர்ந்த ஜெய்குமார்(48), என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.