பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே தாய் திட்டியதால் +2 மாணவி ஒருவர் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டதில் படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள அரும்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் முகமதுசுல்தான் மகள் கமிலா (19), இவர் இதே பகுதியில் உள்ள சாந்தி நிகேதன் மேல்நிலைப்பள்ளியில் +2 படித்து வருகிறார்.
இவர் நேற்று பள்ளி சீருடையை துவக்காமல் அதை உடுத்திக்கொண்டு பள்ளிக்கு செல்ல புறப்பட்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த கமிலாவின் அம்மா சம்சத்பேகம் கமிலாவை திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த கமிலா வீட்டிலிருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
இதில் படுகாயமடைந்த கமிலாவை இவரது உறவினர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கமிலா திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அரும்பாவூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.