பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தை சேர்ந்தவர் வைத்திலிங்கம். இவரது மகள் தேவிகா (27). நேற்று, இவர் தாய் வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்றிரவு தேவிகா மற்றும் பெற்றோர்கள் அயர்ந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12.30 மணி அளவில் வீட்டினுள் புகுந்த திருடன் தேவிகா அணிந்திருந்த 8 சவரன் தங்க தாலிக் கொடியை பறித்துக் கொண்டு தப்ப முயன்றான். அப்போது தேவிகா திருடன்.. திருடன்… என கூச்சலிட்டார். கூச்சல் சத்தத்தை கேட்ட அப்குதி மக்கள் ஒன்று திரண்டு திருடனை பிடிக்க துரத்தினர். திருடன் அருகில் உள்ள பருத்தி காட்டினுள் புகுந்து தப்பி ஓடிவிட்டான். திருடு போன தாலிக்கொடியின் சுமார் ஒன்றரை லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த குன்னம் பகுதி போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய திருடனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.