பெரம்பலூர் அருகே பூசாரியை கட்டிப்போட்டு கோயில் உண்டியலை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தில் அஞ்சுதம்பிரான்பெரியசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த ஜூலை 27ம் தேதி நடந்தது.
இதைத்தொடர்ந்து தற்போது மண்டல பூஜை நடந்து வருவதால் கோயில் பூசாரி கிருஷ்ணசாமி(55) கோயிலிலேயே தங்கியிருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு பூசாரி கிருஷ்ணசாமி கோயிலில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் கோயிலுக்குள் வந்த எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல் பூசாரி கிருஷ்ணசாமியை எழுப்பி கோயிலின் சாவியை தருமாறு மிரட்டி கேட்டுள்ளனர்.
சாவியை தர மறுத்த கிருஷ்ணசாமி மீது ஆத்திரமடைந்த அந்த கும்பல் பூசாரியை தாக்கியதுடன் அவரது கைகளை கயிறால் கட்டிப்போட்டு விட்டு கோயிலில் இருந்து சில்வர் உண்டியலை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். மர்ம கும்பலால் தாக்குதலுக்குள்ளான பூசாரி கிருஷ்ணசாமி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இத்தகவலறிந்த பெரம்பலூர் டி.எஸ்.பி., கார்த்திக் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து கிருஷ்ணசாமி கொடுத்த புகாரின்பேரில் பாடாலூர் எஸ்.ஐ., சுப்புலட்சுமி வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.