பெரம்பலூர் : கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாட்டில் இறந்து போன தனது மகனை மறக்க மனமில்லாத தந்தை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் கொளக்காந்தம் அருகே உள்ள அயனாபுரம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது – 55). சிங்கப்பூர் வேலை பார்த்து வந்த இவரது இளைய மகன் சின்னதுரை(28) கடந்த ஆண்டு திடீர் உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து இந்திய அரசின் உதவியுடன் வெளிநாட்டிலிருந்து சின்னதுரையின் உடல் அய்யானாவரம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்கு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், வெளிநாட்டில் இறந்து போன தனது இளைய மகன் சின்னதுரையை நினைத்து கடந்த ஆண்டு முதல் சுந்தர்ராஜ் மிகவும் மன வேதனையுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த 5ந்தேதிசின்னதுரையின் முதல் ஆண்டு நினைவு நாள் வந்துள்ளது. இதன் காரணமாக மேலும் மனவேதனை அடைந்த சுந்தர்ராஜ் இன்று அதிகாலை தனது வீட்டினுள் ஒரு அறையில் உள்ள விட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றிய தகவல் விடிந்ததும், அவரது குடும்பத்தாருக்கு தெரிய வந்துள்ளது. இதுபற்றி சுந்தர்ராஜுன் மூத்த மகன் சூர்யபிரகாஷ் (31) அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மருவத்தூர் போலீசார் சுந்தர்ராஜுன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்து போன தனது மகனை மறக்க மனமில்லாத தந்தை ஒருவர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தார் உள்பட அக்கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!