பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி போதையில் மயங்கிய கரும்பு வெட்டும் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மேல்சிறுவளூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பன் மகன் மொட்டையன்(50), கரும்பு வெட்டும் தொழிலாளியான இவர் கடந்த 2 மாதங்களாக பெரம்பலூர் அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் நண்பர்களுடன் தங்கி சுற்று வட்டார கிராமங்களில் கரும்பு வெட்டும் கூலித்தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் இன்று முன்தினம் வேலை முடிந்து இரவு நண்பர்கள் சிலருடன் சேர்ந்து பிச்சை என்ற விவசாயி வயலில் மது அருந்தியுள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர் மதுபோதையில் மொட்டையன் மயக்கமடைந்ததால் அவரை அங்கேயே விட்டு விட்டு அவரது நண்பர்க அங்கிருந்து புறப்பட்டு நெடுவாசல் கிராமத்திற்கு வந்து விட்டனர்.
இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் மொட்டையன் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்து மது அருந்திய சம்மந்தப்பட்ட வயலுக்கு சென்று பார்த்த போது மொட்டையன் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளிகளின் ஏஜென்டான விழுப்புரம் மாவட்டம் அருகம்பாடி கிராமத்தை சேர்ந்த அருள்தாஸ்(60),அளித்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.