பெரம்பலூர்: மங்கலமேடு அருகே சாலையோரத்தில் நின்றிருந்த லாரி மீது கார் அதிவேகமாக மோதியதில் 2 பெண்கள் இன்று பரிதாபமாக உயிரிழந்தனர்.
கரூர் மாவட்டம், சின்ன தாராபுரத்திலிருந்து கடலூர் மாவட்டத்துக்கு இன்று பிற்பகல் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு அருகே உள்ள தம்பை கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையோரத்தில் பழுதாகி நின்றிருந்த லாரியின் பின் புறத்தில் கார் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் , காரில் பயணம் செய்த கடலூர் மாவட்டம், கூத்தபாக்கம் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் மனைவி காந்திமதி (42) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், இந்த விபத்தில் சுப்ரமணியன் மகன் பூபதிராஜா (21), மகள் திவ்யா (24), பாலகிருஷ்ணன் மனைவி கவிதா (31), இவரது மகள் ஜனனி (9) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இது குறித்த தகவலறிந்த மங்கலமேடு போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்த நபர்களை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே திவ்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில், மங்கலமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.