பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ளது எளம்பலூர் கிராமம். அக்கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட சமத்துவபுரம் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடி தண்ணீர் வினியோகிக்க பொதுமக்கள் கோரியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி சுமார் 30 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர்.
எளம்பலூர், நல்ல கனிம வளம் கொண்ட, அதிக வருவாய் உள்ள பஞ்சாயத்து ஆகும். ஆனால் அவ்வூரில் பதவிக்கு வரும் தலைவர்கள் எல்லாம் அந்த ஊரின் மலையில் இருக்கும் கல், மண்ணில் மட்டுமே கண் உள்ளதே தவிர பொதுமக்களுக்கு சேவை செய்ய வேணடிய எண்ணம் மிக குறைவாகவே உள்ளது.
சட்டப்படியோ, சட்டத்திற்கு புறம்பாகவோ அல்லது அதிகாரிகளின் உதவியுடனோ அங்கு கல், மண்ணை அள்ளி விற்றவர்கள் இன்று கோடிகணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வைத்துள்ளனர்.
அதிக அளவில் வருமானத்திற்கும் மீறி கருப்பு பணத்தையும் வைத்துள்ளனர்.
இவர்களை எதிர்த்து எவரும் தனியொரு ஆள் ஊராட்சி தலைவருக்கு போட்டியிடுவது என்பது மிக சிரமமான காரியம்.
ஆனால், சமத்துவபுரம் மக்களுக்கு குடி தண்ணீர் ஒரு நாள் விட்டு ஒருநாள் பைப் லைன் மூலம் வினியோகிக்கப்பட்டு வந்துள்ளது.
ஆனால், கடந்த சில வாரங்களாக முறையாக தண்ணீர் வினியோகம் செய்யாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி இன்று பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்டனர்.
இது குறித்து பொதுமக்கள் விளக்கம் கேட்டதற்கு ஊராட்சி தலைவர் உணர்ச்சி வசப்பட்டார்.
பொதுமக்கள் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைத் தீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுப்போம் எனக் கூறி கலைந்து சென்றனர்.
ஆனால், அங்கு சம்பவத்தின் சற்று நேரத்திற்கு முன்னர்தான், எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன் தனது சொந்த ஊரான எளம்பலூரில் தமிழக அரசின் விலையில்லா (இலவச) மிக்சி, கிரைண்டர், பேன் வழங்கும் விழாவில் அம்மா ஆட்சியில் அனைத்தும் பெற்று விட்டோம் என அம்மா, அம்மா என புகழ்ந்து பேசினார். ஆனால், அவர் எசனையில் நடக்கும் விழாவிற்கு சென்ற சற்று நேரத்தில் இந்த முற்றுகை சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.