பெரம்பலூர் :பெரம்பலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு அக்கிராம பொதுமக்களே வீடு வீடாக 50 ரூபாயாக வசூல் செய்து வாடகை கொடுக்கும் அவலம் நடந்து வருகிறது.
பெரம்பலூர் மாவட்டம், வேலூர் ஊராட்சிக்குட்பட்ட கீழக்கணவாய் கிராமத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு லேப்டாப் வழங்கும் விழாவுக்கு பெரம்பலூர் ஆட்சியர் தரேஷ்அஹமது சென்றார். அப்போது ஆட்சியரிடம் கீழக்கணவாய் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டம் வேலூர் ஊராட்சிக்குட்பட்ட கீழக்கணவாய் கிராமத்தில் 350 ரேஷன் கார்டுகள் உள்ளன. எங்கள் ஊரில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் பகுதி நேர ரேஷன் துவக்கப்பட்டது. இதுவரை ரேஷன் கடைக்கு சொந்தமாக கட்டிடம் இல்லை. ரேஷன் கார்டுள்ள பொதுமக்களே தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து கார்டு ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் வசூல் செய்து கட்டிட உரிமையாளருக்கு செலுத்தி வருகின்றோம்.
இதுவரை கட்டிடம் மூன்று முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாடகை கொடுப்பது, வேறு கட்டிடம் மாற்றுவது எல்லாம் அரசின் கடமையாகும்.
இது குறித்து எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோரிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ரேஷன் கடைக்கு அரசு கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டி நான்கு வருடங்கள் ஆகிறது.
ஆனால் கட்டிடம் கட்டுவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. எனவே கலெக்டர் நேரடியாக அரசுக்கு பரிந்துரை செய்து பகுதி நேர ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கான தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் முழுநேர ரேஷன் கடை, மயான சுற்றுச்சுவர், மகளிருக்கான சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற வேண்டும்.
அப்படி நிறைவேற்றவில்லையென்றால் எங்களது ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டை ஆகியவற்றை வரும் 21ம் தேதி ஆட்சியரிடம் ஒப்படைக்க உள்ளோம், என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் தரேஷ்அஹமது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.