பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் எறையூரில் உள்ள சர்க்கரை ஆலையின் 2015-2016 ஆம் ஆண்டிற்கான அரவைத் துவக்க விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது அரவை எந்திரத்திற்குள் கரும்பை இட்டு நடப்பாண்டிற்கான அரவையை துவக்கி வைத்தார்.
2014-2015 நடவு பருவத்தில் மொத்தம் 12 ஆயிரத்து 280 ஏக்கர் கரும்பு பதிவு செய்து, 2015-2016 ஆம் ஆண்டிற்கான அரவைப்பருவத்திற்கு 3 லட்சத்து 90 ஆயிரம் மெட்ரிக் டன்கள் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
அதில் எறையூர் சர்க்கரை ஆலையின் அரவைக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் மெட்ரிக் டன்கள் கரும்பினை அரவை செய்வது எனவும், பிற ஆலைகளுக்கு கரும்பு பரிமாற்றம் முறையில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் மெட்ரிக் டன்களும், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன்களும், கள்ளக்குறிச்சி-1 கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 35 ஆயிரம் மெட்ரிக் டன்களும் கரும்பு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது என்று சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகி சி.பிரகாசம் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகராட்சித் துணைத் தலைவரும், அதிமுக மாவட்ட செயலாளருமான ஆர்.டி.ராமச்சந்திரன், கரும்பு ஆய்வாளரும், அண்ணா தொழிற்சங்க பொறுப்பாளருமான மா.வீரபாண்டியன் உள்ளிட்ட அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.