பெரம்பலூர் பழைய நகராட்சி அருகே உள்ள ஐயப்பன் கோயிலில் 49 ஆம் ஆண்டு மண்டல பூஜையை முன்னிட்டு குத்து விளக்கு பூஜை நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
பெரம்பலூர் நகராட்சியின் பழைய அலுவலகம் அருகேயுள்ள கற்பக விநாயகர் மற்றும் ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான மண்டல பூஜையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் பரம்பரை ஸ்தானீகம் வேதாகமச் சிரோன்மணி வி.என்.எஸ். சுவாமிநாத சிவாச்சாரியார் மற்றும் குருநாதர்கள் தலைமையில் கற்பத விநாயகர், ஐயப்பன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடும், அபிஷேக ஆராதணைகளும் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, வெள்ளிக்கிழமை இரவு குத்து விளக்கு பூஜையும், சனிக்கிழமை மாலை சங்காபிஷேகமும் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.
மேலும், பெரம்பலூர் நகாராட்சி தெப்பக் குளத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை (டிச. 13) மாலையில் தெப்பத்தேர் விடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.