பெரம்பலூரில் நேற்று செய்தி சேகரிக்க சென்ற தினகரன் நிருபர் மற்றும் போட்டோ கிராபரை தாக்கிய ரவுடி கும்பலை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்திட வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட பிரஸ் கிளப் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 7வது வார்டு ரோஸ் நகரில் குடிநீர், சாலை,பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என பொது மக்கள்
அளித்த தகவலின் பேரில் நேற்று செய்தி சேகரிக்க சென்ற தினகரன் நிருபர் வில்சன் மற்றும் போட்டோகிராபர் குணசேகரன் ஆகியோர் ரவுடி
கும்பலால் தாக்குதலுக்குள்ளாகி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல்
சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 7 பேர் பெரம்பலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு இன்று மாலை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று மதியம் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே பெரம்பலூர் மாவட்ட பிரஸ் கிளப்பை சேர்ந்த செய்தியாளர்கள்
மற்றும் புகைப்படகலைஞர்கள் உட்பட 50க்கும் மேற்ப்பட்டோர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடி கும்பலை கண்டித்தும், அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தி வலியுறுத்தியும், பத்திரிக்கையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திட வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி மூத்தசெய்தியாளர் சூரியகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட எஸ்பி சோனல்சந்திரா, மாவட்ட ஆட்சியர் தரேஷ்அகமது ஆகியோரிடம் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.