பெரம்பலூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 24 கி.மீ. சாலை, ரூ.64 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த சாலை அகலப்படுத்தும் பணிகள் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே க.எறையூர் பிரிவு சாலையில் தொடங்கப்பட்டு, குன்னம் வரை சாலையின் இருபுறமும் உள்ள மரம் மற்றும் முள் செடிகள் அகற்றும் பணி முதற்கட்டமாக நடைபெற்று வருகிறது. இதன் பின்னர் அக்கிரமிப்புகள் அகற்றப்படும். அடுத்தகட்டமாக சாலையின் ஒருபுறம் சீர்செய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கும். மறுபுறம் புதிய சாலை அமைக்கப்படும்.
இச்சாலை அகலப்படுத்தும் பணி முழுமையாக நிறைவேற்றப்பட்டால் பெரம்பலூர் மற்றும் அரியலூர் பகுதிகள் முக்கிய தொழில் மற்றும் வர்த்தக மையங்களாக மாறுவதுடன், அப்பகுதிகள் தொழில் வளர்ச்சி பெறும். இந்த சாலையானது முக்கிய கோவில் நகரங்களான தஞ்சாவூர், திருவையாறு, மதுரை, சிவகங்கை, திருவாடானை, காளையார்கோவில் ஆகியவற்றை பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கும் சாலையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.