பெரம்பலூர்- வடக்குமாதவி சாலையில் வழிந்தோடும் பாதாள சாக்கடைத் திட்ட கழிவு நீர்.
பெரம்பலூ்: பெரம்பலூர் நகரில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை நீர் சாலைகளில் வழிந்தோடுவதால் நகர மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட 21 வார்டுகளிலும் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டு, இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நீர் பாதாள சாக்கடை வழியாக வெளியேற ஆங்காங்கே நீரேற்று நிலையங்களும் அமைக்கப்பட்டு. நகராட்சிக்கு உட்பட்ட வணிக, அலுலக , குடியிருப்புகளும் முழுமையாக புதை சாக்கடை இணைப்பு பெறாத நிலையில் பெரும்பாலான பகுதிகளில் புதை சாக்கடைகளிலிருந்து ஆள் துளை துவாரம் வழியாக சாக்கடை நீர் வழிந்தோடுகிறது.
நகராட்சிக்குள்பட்ட 5-வது வார்டில், பெரம்பலூர் – வடக்கு மாதவி சாலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பாதாள சாக்கடை நீர் தெருவில் வழிந்தோடியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் நகராட்சி பணியாளர்கள் மூலம் பாதாள சாக்கடை ஆள் துளை துவாரத்தில் இருந்த கழிவுகள் அகற்றப்பட்டு, கழிவு நீர் வெளியேற்றப்பட்டது. ஆனால், அங்கு தொடர்ந்து அடைப்பு ஏற்படுவதால் துர் நாற்றத்துடன் கழிவுநீர் வெளியேறுகிறது
இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியது:
கடந்த ஒரு வாரமாக பாமாள சாக்கடையிலிருந்து கழிவு நீர் வெளியேறுவது தடைபடுகிறது. இதனால், ஆள் துளை துவாரம் வழியாக கழிவு நீர் வழிந்து சாலையில் ஓடுகிறது. இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது மழை பெய்துவரும் வேளையில் பாதாள சாக்கடை கழிவு நீரும் சாலையில் தேங்கி நிற்பதால், தெருக்களில் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
நகரில் பல இடங்களில் இந்த பிரச்னை தொடர்கிறது. ஆனால், நகராட்சி நிர்வாகம் சார்பில் இதுவரை சீரமைப்பதில் மெத்தனமாக உள்ளது.
ஏற்கனவே, மர்ம காய்ச்சலால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வரும் வேளையில், தெருக்களிலும், பிரதான சாலைகளிலும் வழிந்தோடும் புதை சாக்கடை நீராலும் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, நகராட்சி அலுவலர்கள் இப் பிரச்னைக்கு வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தனர்.