பெரம்பலூர்: பெரம்பலூர் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் விநியோக பணிகள், சுகாதாரப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ் அஹமது நேரில் ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது இன்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்ப்பட்ட பகுதிகளான அரணாரை மற்றும் வடக்கு காலணியில் பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் வினியோகம் மற்றும் தனிநபர் இல்லக் கழிவறைகள் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், மழைக் காலங்களில் தொற்று நோய்கள் மற்றும் காய்ச்சல் ஏற்படா வண்ணம் பொதுமக்கள் அனைவரும் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையுடன் வைத்துருப்பதுடன், குடிநீரை காய்ச்சி பருக வேண்டும் என்று பொதுமக்களிடம் தெரிவித்தார். மேலும் பொதுமக்களின் நலன்கருதி தனிநபர் கழிப்பிடம் கட்ட மத்திய, மாநில அரசுகளின் மானிய உதவித்தொகையாக ரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் தயவுசெய்து அனைவரும் தங்கள் வீட்டில் தனிநபர் கழிப்பறைகளை அமைத்தே தீருவோம் என்று உறுதி எடுக்க வேண்டும். அனைவரும் ஒத்துழைத்தால்தான் நமது பெரம்பலூர் மாவட்டத்தை திறந்த வெளி கழிப்பிடமற்ற மாவட்டமாக மாற்ற முடியும் என்று பொதுமக்களிடம் எடுத்து கூறினார்.
அதனை தொடர்ந்து ஆலம்பாடி பகுதிக்கு குடிநீர் வழங்கும் கிணற்றினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். கிணற்றினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பேணிபாதுகாத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான, மற்றும் சுகாதாரமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
அப்போது நகராட்சி ஆணையர் முரளி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.