பெரம்பலூர் மாவட்டத்திற்கு 2016-17-ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த திட்டத்திற்காக நபார்டு வங்கியால் தயாரிக்கப்பட்ட வங்கிக்கடன் திட்டத்தை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது இன்று நடைபெற்ற வங்கியாளர் கூட்டத்தில் வெளியிட்டார்.
திட்டத்திற்கான முதல் பிரதியை மாவட்ட ஆட்சியரிடமிருந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் சித்தாத்தன் பெற்றுக்கொண்டார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்தாவது:
நபார்டு வங்கி, பெரம்பலூர் மாவட்டத்திற்கான திட்டஅறிக்கையை மிகச்சிறப்பாக தயாரித்துள்ளது. அதற்காக அவர்களை முதலில் வாழ்த்துகிறேன். வங்கிகள் இதை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைவருக்கும் வங்கி சேவை என்ற திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகள், குத்தகை விவசாயிகள் கிராம கைவினையாளர்கள் ஆகியோருக்கு தேவையான கடன் உதவியை அளிக்க வங்கிகள் முன் வர வேண்டும்.
இத்திட்ட அறிக்கை பல அரசு துறைகள், வங்கிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்த வளம் சார்ந்த கடனாற்றல் மதிப்பீடான ரூ.3019.22கோடியில் 74 சதவீதம் வேளாண் துறைக்கும், 8 சதவீதம் சிறு குறு தொழில்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி கல்வி கடனுக்காகவும், வீட்டு கடனுக்காகவும், ஏற்றுமதி கடனுக்காகவும், தனித்தனியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி முன்னுரிமை கடன்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகளை சமீபத்தில் மாற்றி அமைத்துள்ளது. இதில் சிறு குறு விவசாயிகள் மற்றும் குறுந்தொழில்களுக்கு தனியாக இலக்குகள் வங்கிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் சிறு குறு தொழில்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க வேண்டும். மேலும் வங்கிக் கிளைகள் தங்களது ஆண்டுத் திட்ட அறிக்கையை தயாரிக்கும் பொழுது நிபார்டு வங்கியின் அறிக்கையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், ரிசர்வ் வங்கி உதவிபொது மேலாளர் தியாகராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள்தாசன், நபார்டு வங்கியின் பெரம்பலூர் மாவட்ட வளர்ச்சி மேலாளர் நவீன்குமார், அரசு அதிகாரிகள் மற்றும் வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.