பெரம்பலூர் மாவட்டம் தொடந்து பெய்து வந்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க முதற்கட்டமாக 16.91 லட்சம் தமிழக அரசிடமிருந்து வரப்பெற்றுள்ளது – இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது – இதுவரை பாதிக்கப்பட் 798 வீடுகளுக்கு ரூ.32.77 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில், தற்போது நெல் 5,633 ஹெக்டரிலும், கரும்பு 5,172 ஹெக்டரிலும், பயறுவகை பயிர்கள் 951 ஹெக்டரிலும், பருத்தி 20,383 ஹெக்டரிலும், மக்காச்சோளம் 51,582 ஹெக்டரிலும், இதர தானியப்பயிர்கள் 1,205 ஹெக்டரிலும், எண்ணெய்வித்து பயிர்கள் 1,012 ஹெக்டரிலும், சின்னவெங்காயம் 8,120 ஹெக்டரிலும், மரவள்ளி 1,732 ஹெக்டரிலும், மஞ்சள் 676 ஹெக்டரிலும் மற்றும் இதர பயிர்கள் 1,226 ஹெக்டரிலும் மொத்தம் 97,692 ஹெக்டரில் பயிர்சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை சராசரியைவிட அதிகமாகவும், தொடர்ச்சியாகவும் பெய்துள்ளதால் மக்காச்சோளம், பருத்தி, சின்னவெங்காயம் மற்றும் மரவள்ளி ஆகிய பயிர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
10.11.2015 அன்று வீசிய பலத்த சூறாவளி காற்றினால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம், பாக்கு மற்றும் வாழை பயிர்களை வேளாண் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆண்டு வரப்பெற்றுள்ள அரசாணையின்படி 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணம் வழங்கலாம் என ஆணை வரப்பெற்றுள்ளது. எனவே 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களின் முதற்கட்ட கணக்கெடுப்பின் விவரம் 19.11.2015 அன்று அரசுக்கு அறிக்கையாக அனுப்பப்பட்டது.
முதற்கட்ட கணக்கெடுப்பின்படி 210.92 ஹெக்டேர் மக்காச்சோளமும், 1.01 ஹெக்டேர் வாழையும், 0.15 ஹெக்டேர் புடலையும், 1.4 ஹெக்டேர் பாக்கும் ஆக மொத்தம் 219.93 ஹெக்டருக்கு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் ஆணைப்படி நிவாரண தொகையாக ரூ.16 வட்சத்து 91 ஆயிரம் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவு வரப்பெற்றுள்ளது.
இத்தொகை விரைவில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் பாதிக்கப்பட்ட விவாசாயிகளின் வங்கி கணக்கில் வழங்கப்படும். மேலும் தொடர்மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பருத்தி மற்றும் இதர பயிர் பாதிப்பு குறித்த இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு வேளாண் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வறிக்கையும் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ஆங்காங்கே பகுதியளவிலும், முழுமையாகவும் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வீடுகளுக்கு சம்மந்தப்பட்ட பகுதியின் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு பாதிப்பிற்கு ஏற்ப தமிழக அரசின் நிவாரண உதவித்தொகைகளை உடனடியாக வழங்க அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக எடுக்கப்பட்டது.
அதன்படி 1.10.2015 முதல் தற்போது வரை பாதிக்கப்பட்ட 798 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுக்ப்பட்டு, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.32 லட்சத்து 77ஆயிரத்து 100 நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் வட்டத்தில் கூரைவீடு 49 பகுதியாகவும், 3 முழுவதுமாகவும், ஓட்டுவீடு 30 பகுதியாகவும், இதரவீடுகள் 6 பகுதியாகவும் – 1 முழுவதுமாகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
வேப்பந்தட்டை வட்டத்தில் கூரைவீடு 117 பகுதியாகவும், 8 முழுவதுமாகவும், ஓட்டுவீடு 41 பகுதியாகவும் – 2 முழுவதுமாகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குன்னம் வட்டத்தில் கூரைவீடு 374 பகுதியாகவும் – 10 முழுவதுமாகவும், ஓட்டுவீடு 50 பகுதியாகவும் – 6 முழுமையாகவும், இதரவீடுகள் 2 பகுதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆலத்தூர் வட்டத்தில் கூரைவீடு 76 பகுதியாகவும், 3 முழுவதுமாகவும், ஓட்டுவீடு 18 பகுதியாகவும், இதரவீடுகள் 2 பகுதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு ஆகமொத்தம் 798 வீடுகளுக்கு நிவாரண உதவியாக ரூ.32,77,100 நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 01.10.2015 முதல் தொடர் மழையால் பாதிக்கப்ட்டு உயிரிழந்த 4 நபர்களின் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.13.50 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.