பெரம்பலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்டு 14 ந்தேதி நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.
இன்று இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரித்துள்ளதாவது:
தமிழக அரசு தமிழ்நாடு சுகாதார திட்டத்தின்கீழ் ஜி.வி.கே. இஎம்ஆர்ஐ நிறுவனத்துடன் அவசர கால சேவைகளை புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இணைந்து செயல்படுத்தி வருகிறது.
108 அவசர கால சேவை மையம்; சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபாகாந்தி தாய் சேய் நல மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. ஜி.வி.கே. இஎம்ஆர்ஐ நிறுவனத்திற்கு தேவைப்படும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் பெரம்பலூர் – மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகதில் 14.8.2015 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.30 முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தமிழகத்தின் எந்த பகுதி பகுதியிலும் பணியமர்த்தப்;படுவார்கள். இரண்டு பணியிடங்களுக்கும் 12 மணி நேரம் இரவு அல்லது பகல் பணி நேர சுழற்சி முறையில்; பணிபுரிவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை முகாம் அன்றே வழங்கப்படும்.
ஓட்டுனர் பணிக்கு ஆண்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாத, நேர்முக தேர்வு அன்று 25 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும், உயரம் 162.5 செ.மீட்டருக்கும் குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றும், மேலும் குறைந்த பட்சம் கனரக வாகனம் பழகுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வேலைவாய்ப்பு முகாமில் இவர்களுக்கு எழுத்துத்தேர்வு, தொழில் நுட்பத்தேர்வு, நேர்காணல், கண்பார்வை தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வுகள் நடைபெறும்.
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு 9 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி மற்றும் தினசரி உணவுக்காக ரூ.100 படியும் வழங்கப்படும். ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்வி, ஓட்டுநர் உரிமம், மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் வேலைவாய்ப்பு முகாம் அன்று நேரில் கொண்டுவர வேண்டும். ஓட்டுநர் பணிக்கு மாத ஊதியம் ரூ.10300 வழங்கப்படும்.
அடிப்படை மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆண், பெண் இருபாலினரும் 20 வயதிற்க்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். பி.எஸ்.சி நர்சிங், விலங்கியல், தாவரவியல், உயிர் வேதியியல், நுண்ணுயிரியல், பிளாண்ட் பயாலஜி, மற்றும் லைப் சைன்ஸ் அல்லது 12 ஆம் வகுப்பு முடித்து 3 ஆண்டு ஜி.என்.எம் படிப்பு அல்லது எ.என்.எம் அல்லது 12 ஆம் வகுப்பு முடித்து டிப்ளமோ நர்சிங் உதவியாளர் படிப்பு படித்திருக்கவேண்டும். இந்த பணிக்கு மாதச்சம்பளமாக ரூ.10800 மற்றும் இதர படிகள் வழங்கப்படும்.
பயிற்சி மருத்துவ உதவியாளர் பணிக்கு 12 ஆம் வகுப்பு முடித்து அரசு மருத்துவ கல்லூரியில் 1 ஆண்டு டி.எம்.இ பட்டயப்படிப்பு படித்த ஆண், பெண் இருபாலரும் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியிடத்திற்கு விண்ணப்பதாரர் 19 வயது பூர்த்தி செய்து 25 வயதிற்குமிகாமலும், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒரு வருட காலத்திற்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.10800 வழங்கப்படும்.
அடிப்படை மருத்துவ உதவியாளர், பயிற்சி மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு எழுத்துத்தேர்வு, உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பாக நேர்முகத்தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகளும் அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் மாத ஊக்கத் தொகையாக ரூ.3,000 வழங்கப்படும்;.
மேலும் இந்த பணிகள் குறித்த விபரம் அறிய செல்வகுமார் ஒருங்கிணைப்பாளர் 8939889129, மோகன்ராஜ் மேலாளர் 8939885045 என்ற எண்களில் தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.