பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் முதியவர்கள் 2 பேர் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.
பெரம்பலூர் ரெங்கா நகரை சேர்ந்தவர் மு. கிருஷ்ணமூர்த்தி (63). இவர், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை புதிய பேருந்து நிலையத்துக்கு சென்று வருவதாக அவரது குடும்பத்தினரிடம் கூறிச்சென்றார்,
நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதையறிந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், புறநகர் பேருந்து நிலையத்தில் இறந்து கிடந்தது இன்று காலையில் தெரியவந்தது.
இதுகுறித்து, அவரது மனைவி ஜெயம் (53) அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தூக்கிட்டு மூதாட்டி சாவு :
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள அசூர் கிராமத்தை சேர்ந்தவர் ப. அஞ்சலை (70). இவர், கடந்த சில நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாராம். இந்நிலையில், அவரது வீட்டில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து, அவரது மகள் அன்னக்கொடி (35) அளித்த புகாரின்பேரில் மங்கலமேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.