பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் 80 சதவீதம் ஆதார் அட்டைகள் பணி முடிவுபெற்றது – மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தகவல்
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துவக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு ஆதார் அட்டைக்கான புகைப்படம் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. துவக்கி வைத்து பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் கை ரேகை, விழித்திரை மற்றும் புகைப்படம் போன்ற உயிர் புள்ளியியல் பண்புகள் (Bio-metric) பதிவு மையங்கள் மூலமாக பதிவு செய்யும் பணி பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் 80 சதவீதம் அதாவது 4,47,740 மக்களுக்கு ஆதார் அட்டை எடுக்கப்பட்டுள்ளது.
மீதிஉள்ள 20 சதவீதம் பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால் கூடுதல் செயலாளர், மற்றும் மக்கள் தொகை ஆணையர் உத்தரவின்படி அனைத்து பள்ளிகளிலும் மற்றும் பள்ளி நிறுவனங்களிலும், சிறப்பு முகாம்கள் அமைக்க தெரிவித்ததன் பெயரில் , பெரம்பலூர் மேற்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் அனைத்து பள்ளிகளிலும் ஆதார் பதிவு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் அதில் மாணவ, மாணைவிகள் ஆசிரியரின் அறிவுரைகளின்படி தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் இடம் பெற்று பிரத்தியேக அடையாள எண் பெற இந்த வாய்ப்பை பள்ளி மாணவர்கள் தவறவிடாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எலிசபெத், ஆதார் அட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.விக்னேஷ்வர் மற்றும் வருவாய் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.