பெரம்பலூர் : தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் கடந்த சில நாட்களாக வடகிழக்குபருவமழை திவிரமாக பெய்து வரும் நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை
முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டுவந்த சூழலில் மாலை திடீரென பெரம்பலூர், பாடலூர், செட்டிகுளம்,அம்மாபாளையம், வேப்பந்தட்டை,
வாலிகண்டபுரம், லப்பைக்குடிக்காடு, குன்னம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய தொடங்கியது.
இதனால் பொது மக்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் மகிழ்ச்சியடைந்தனர். இதனிடையே பெரம்பலூர் அருகே திருச்சி&சென்னை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள
வல்லாபுரம் பிரிவு பாதையில் உள்ள தனியார் பெட்ரோல்பங்கின் மேற்கூரை பெயர்த்து விழுந்தது. இதனால் பங்கில் பெட்ரோல், டீசல் நிரப்பி கொண்டிருந்த நான்கு மற்றும்
இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் அலறி அடித்து கொண்டு தப்பி ஓடினர். இந்த விபத்தில் அதிஷ்டவசமாக காயங்கள் ஏதுமின்றி பலர் உயிர் தப்பினர்.
இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள இரூர் கிராமத்தை சேர்ந்த அம்மமுத்து மகன் நடராஜன்(50) என்ற விவசாயி ஊருக்கு வடக்கு உள்ள
அவரது வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது இடி தாக்கி உயிரிழந்தார்.
நீண்ட நேரமாகியும் நடராஜன் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தார் வயலுக்கு சென்று பார்த்த போது சம்பவம் தெரிய வந்துள்ளது, இதுகுறித்து
பாடாலூர் காவல் நிலையத்தில் அவர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நடராஜனின் உடலைக்கைப்பற்றி பிரேத
பரிசோதனைக்காக பெரம்பலூர் ஜீஹெச்சுக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.